பெண்ணியம் என்றால் என்ன? – தமிழரசன்
இது என்னவோ பத்தாம் வகுப்பு மாணவருக்கு கேட்கப்படும் 2 மதிப்பெண் வினா அல்ல. இன்று நம் சமுதாயத்தில், நம்மால், நம்மில் ஒருவருக்கு (பெண்ணுக்கு) இழைக்கப்படும் கொடுமைகளைக் கண்டு பொறுமை இழந்தவர்களால் உருவாக்கப்பட்ட, உயிரூட்டப்பட்ட எண்ணங்கள்தான் பெண்ணியம்.
பெண் விடுதலை, பெண்கள் நலவாழ்வு, சமூகத்தில் பெண்களைப் புறக்கணித்து, தாழ்வுபடுத்தி, இழிவுபடுத்தப்படும் நிலையை மாற்றி அவர்களின் முன்னேற்றத்திற்காக உருவான ஒரு அரசியல், சமூகம், கலாச்சாரம் சார்ந்த ஒரு அமைப்பு ஆகும்.
இவ்வமைப்பு, பெண்களால் தோற்றுவிக்கப்பட்டது அல்ல. அனைத்து சீர்திருத்த எண்ணம் கொண்ட மக்களாலும் தோற்றுவிக்கப்பட்டதுதான் பெண்ணியம்.
தோற்றம்:
இது ஒரு இனமோ, மொழியோ இல்லை. இது ஒரு காரணம். இது தோன்றிய நாள், மாதம், ஆண்டு என்றெல்லாம் கூறினால், அது கண்டிப்பாக பொருந்தாது.
சற்றே வரலாற்றைப் புரட்டிப் பார்த்தோமானால், முதல் உலகப்போரின் போதும், அடுத்து வந்த இரண்டாம் உலகப்போரின்போதும், மேற்கத்திய நாட்டில் உள்ள அனைத்து (பெரும்பாலான) ஆண்கள் போரில் பங்கேற்க நேரிட்டது. இத்தருணத்தில், வீட்டில் இருந்த குழந்தைகள், பெரியவர்களை கவனிக்க வேண்டிய கட்டாயத்திலும், பொறுப்பிலும் தள்ளப்பட்டவர்கள் பெண்கள்.
பெண்கள் அன்றுதான் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தனர். நம்மால் முடியும் என்ற சிந்தனை விதைகள் வேறூன்றியதும் அன்றுதான்.
குடும்ப பாரங்களையும் சுமந்துகொண்டு, குதூகலமான வாழ்க்கையையும் ஒரே நிலையில் ஒரு பெண்ணால் அளிக்க இயலும் என்பதை ஆண்களும் புரிந்துகொள்ள ஆரம்பித்த காலம் அது.
ஆண்டாளையோ, வாசுகியையோ பற்றி இங்கு பேசுவது தவறு என்றே நான் உணர்கிறேன். காரணம், இன்றைய சூழலில், வாழ்க்கையின் நடைமுறையில், நாம், நம் கண்களால் காண்கின்ற, அனுபவிக்கின்ற நிகழ்வுகளுக்குதான், வலிமை அதிகம் என்பதில் கருத்து வேறுபாடில்லாதவன் நான்.
பெண்ணியம் இப்படித்தான் மேலை நாடுகளில் தொடங்கியது.
பெண்களின் வளர்ச்சி:
அடிப்படையில் பழமைவாதிகளின் தளைகளில் இருந்து விடுபட்டு வீறுட்டு எழுந்தவர்கள் வெகு சிலரே. காலத்தின் கட்டாயத்தில், கணிணியுகத்தில், மாற்றங்கள் பல நிகழ்ந்து, புது யுகத்தில் பிறந்த, வளர்ச்சி பெற்ற பெண்களின் எண்ணிக்கை பல மடங்கானது.
தமிழகத்திலும், இந்தியாவிலும், அமெரிக்கா, இங்கிலாந்து மற்ற ஐரோப்பிய நாடுகளிலும், ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கினர், விளங்குகின்றனர். அரசியல், சமூகம், நீதி, நிதித்துறை, வணிகம், பன்னாட்டுறவு, பாதுகாப்பு, அறிவியல், தொழில்நுட்பம் என எல்லாத் துறைகளிலும் பெண்களைக் காண முடிகிறது.
அரசியலில் இந்திரா காந்தி, ஜெயலலிதா, தொழில் துறையில் இந்திரா நூயி இன்னும் ஏராளமான பெண்கள் எடுத்துக்காட்டுகளாய் விளங்குகின்றார்கள்.
தவறான வளர்ச்சி:
இன்றைய சூழலில், பெண்ணியம் பேசுவோரில் பலர் பெண்கள், ஆண்களுக்கு நிகரானவர்கள். ஆண்களால் செய்யப்படும் வேலைகள் அனைத்தையும் பெண்களாலும் செய்ய இயலும். ஆணுக்குப் பெண் சமமே என்று பெருமையாய் பேசுகின்றனர். பேசுவதோடு மட்டுமல்லாது, அவற்றை நடைமுறைப்படுத்தவும் செய்கின்றனர். ஆண்கள் அணிவதைப் போன்று இவர்களும் ஆடைகள் அணிந்து கொண்டு, உடைகளில் மாற்றம், மதுபானமருந்துதல், புகைப்பிடித்தல், மதுபானவிடுதிகளுக்குச் சென்று கேளிக்கை நடனங்களாடுதல் போன்ற ஆண்களுக்கு நிகரான செயல்களைப் புரிகின்றனர்.
உண்மையில் இது அவர்களது, முற்போக்குத் தன்மையைக் காட்டவில்லை. மாறாக, அவர்களின் தாழ்வு மனப்பாண்மையைத் தெள்ளத்தெளிவாக ஆண்களுக்கு எடுத்துக்காட்டுகிறது. ஆண்கள் செய்யும் இது போன்ற செயல்கள் அனைத்தும் சமூகத்தால் வெறுக்கப்படும் போது, பெண்கள் செய்யும் அதே செயல்கள், அதே சமூகத்தால் வெறுக்கப்படுகின்றன.
பெண்கள் பலர், இன்று சொந்த ஊரை விட்டு, வெளியூர்களுக்கும், வெளிநாடுகளுக்கும் தனியாக சென்று, பணிபுரிந்து வருகின்றனர். அத்தகைய, நானிலம் அறிந்த நங்கையர்களும், பெண்ணியம் பேசும் பலரும், அவர்களுடைய சொந்த கிராமமும், சொந்த நாடும் எப்படி இருக்கின்றதென்பதை அறியா மடமைகளாக இருப்பது வருத்தமே!
ஆணாதிக்கம்:
ஆதிக்கம் என்பதை சற்றே வரையறை செய்ய வேண்டும். மனிதனோ, விலங்குகளோ அல்ல மற்ற பிற உயிரினங்களோ, தம்மைப் பற்றிய தாழ்வான மனப்பான்மையை தம்மிலிருந்து விடுவிக்க எடுத்துக்கொள்ளும் மருந்துதான் ஆதிக்கம். ஆதிக்கம் செலுத்துவதால், எதிரே உள்ளவர்கள் பயத்தாலும், மற்ற பிற உணர்ச்சிகளாலும் கட்டுப் படுத்தப் படுகிறார்கள். இது உளவியலின் உண்மை.
பெண்கள் எந்தப் பதவியில் இருந்தாலும், எத்துனை வளர்ச்சி பெற்றிருந்தாலும் ஏதோ ஒரு காரணி மூலம் ஆணுக்குக் கட்டுப்பட்டே இருக்க வேண்டிய கட்டாயம் (இன்றைய நடைமுறை).
ஆணாதிக்க ஆரம்பம்:
வீட்டில் ஒரு ஆண்குழந்தை, தன் அக்காவையோ, தங்கையையோ ஏதோ ஒரு பொம்மைக்காக அடிக்கவும் செய்யலாம். ஆனால், அவள் இளையவளாக இருந்தாலும் கூட அவனுக்கு விட்டுக் கொடுக்கத்தான் வேண்டும். இது மழலைப் பருவத்தில்.
அடுத்து பள்ளிப்பருவத்தில் பார்த்தால், பள்ளித்தேர்வில் எத்தனை முறைத் தோற்றாலும், அவன்தன் படிப்பினைத் தொடர வேண்டும். ஆனால், பெண் பிள்ளையோ முதல் வகுப்பில் தேர்ச்சிப் பெற்றாலும், வேலைக்குச் சென்று அவனையும் படிக்க வைத்து, குடும்பபாரத்தையும் சுமக்கவேண்டும்.
இவை பொதுவாக வறுமையில் இருக்கும் குடும்பங்களுக்குப் பொருந்தினாலும், படித்த, ஓரளவு வசதியுள்ள குடும்பத்திலுள்ள பெற்றோர்களும் தங்கள் பெண்பிள்ளைகளுக்குப் பதினெட்டு வயது நிறைந்ததும், வாக்காளர் பட்டியலில் பதிவு செய்கின்றனரோ இல்லையோ, திருமணத் தகவல் மையங்களில் பதிவு செய்துவிடுகின்றனர். ஏனென்றால் பருவமடைந்த பெண்ணை வீட்டில் வைத்திருப்பது என்பது வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு இருப்பதற்குச் சமமாம்.
கல்வி என்று சொல்லும் போது, பெரும்பாலும் ஆண்பிள்ளைகள் கற்பதை விரும்பும் இந்த சமூகம், பெண்பிள்ளைகளின் கல்வியை அவ்வளவாக ஆமோதிப்பதில்லை. தொலைக்காட்சிகளில், அரசுப் பொதுத்தேர்விற்கான முடிவுகள் அறிவிக்கப்படும்போழுது, எல்லா ஆண்டும் அவர்கள், ஒரு எழுத்துக் கூட மாற்றாமல் வாசிக்கும் செய்தி, ”கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும், ஆண்களைவிட பெண்களே அதிக விழுக்காடு தேர்ச்சிப் பெற்றுள்ளனர்” என்பது. இந்த விகிதம் கல்லூரியில் சேரும் போது பாதியாகத்தான் இருக்கிறது.
ஆணாதிக்க வளர்ச்சி:
மேல்நிலைக்கல்வியில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெறும் பெண்கள் கல்லூரியில் சேர்ந்த ஓராண்டு, இரண்டாண்டிற்குள் திருமணம் செய்விக்கப்பட்டு, கல்வியைத் தொடர இயலாது, இடையிலேயே நிறுத்திவிடுகின்றனர். அதிகம் திறமையும், ஆர்வமும் உள்ள பெண்களும் இவர்களில் அடங்குவர். இதனால், அவர்களின் உலகமும் அறிவும் வீட்டிற்குள்ளேயே முடக்கி வைக்கப்படுகிறது.
இப்படி இருக்கும் போது, பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் எங்கே சென்று நடத்துவது? பத்துப் பாத்திரம் துலக்குவதும், அறுசுவைப் பதார்த்தங்கள் செய்வதும் தானே அவர்கள் பொழுதாய் அமைந்து விடுகிறது.
திருமணமாகியும், ஒரு ஆண்மகன் சிறந்த குடிமகனாக, பொறுப்பற்றவனாக, பெண்ணைத் துணி துவைக்கும் கல்லாகப் பயன்படுத்தி, அடி தாளாது தாய் வீட்டிற்கு வந்தால், அவளுக்குப் பெயர் வாழாவெட்டி;
திருமணத்திற்கு முன் கருவைச் சுமந்தால், அவள் வழுக்கி விழுந்தவள்;
திருமணத்திற்குப் பின் கருத்தறிக்கவில்லையென்றால், ஒரு பெண் வாங்கும் பெயர் மலடி;
பல ஆண்களை நுகரும் பெண் வேசி…
கணவனை இழந்தவள் கைம்பெண்…
எங்காவது ஒரு வாழாவெட்டனையோ? வழுக்கி விழுந்தவனையோ?? மலடனையோ?? ஆண் வேசியையோ?? கைம்ஆணையோ?? இந்த பெண்ணியம் பேசுவோர் கேள்விப் பட்டதாவது உண்டா???? இந்த பெயர்கள் அனைத்தும் ஆண் காரணமின்றி அவளுக்கு எப்படி வரமுடியும்??? காரணகர்த்தா ஆண்?? ஆனால் பழிக்கும் பாவத்திற்கும் புகலிடம் பெண்…
இதுபோன்ற நிகழ்வுகளிலெல்லாம் பெண்ணியத்தின் ஈடுபாடு என்ன?, கண்டும் காணாதும் இருப்பதுதான்!
பொதுவாகவே அலுவலகத்தில் ஆணும் பெண்ணும் மேடுபள்ளத்தில் தான் நிற்கின்றனர், விவசாயம் இதர பணிகளில் கூலிக்குச் செல்வோரில் ஆணுக்கு இருநூறு என்றால் பெண்ணுக்கு நூறு அல்லது நூற்றிருபது ரூபாய் தான் சம்பளம். ஆணுக்குப் பெண் சமம் என்று சொல்வதை இங்கு நிறுவுங்களேன். இங்கு பெண்ணியம் பேசுவோர் என்ன செய்கின்றனர்??
வெளிநாடுகளில் பணிபுரியும் பெண்கள், திருமணத்திற்குப் பின் வேலையைவிட்டுவிட்டு, தன் துணைவர் குடியுரிமையில் பயணிக்கின்றனர். அதாவது, பெண்கள் ஆண்களை சார்ந்துதான் இருக்கவேண்டுமாம்.
பல்வேறு சட்டங்கள், சீர்திருத்தங்கள், புரட்சிகள் என்று என்னென்னவோ நடந்து, பெண்களை பெண்சிசுக் கொலை, பாலியத் திருமணம், பாலியல் தொழிலாளர், வரதட்சிணை கொடுமை, சதி போன்ற அதளபாதாளத்திலிருந்து மீட்டு, அவளின் கண்களைக் கட்டி, இருண்ட காட்டில் வழி தேடச் சொல்கிறது இன்றைய உலகம்.
வீட்டைவிட்டு வெளியில் செல்லப் பெண்பிள்ளைகளுக்கு அனுமதி இல்லை. ஆண் இரவு வீட்டிற்கு வராவிட்டாலும் கவலையில்லை. காரணம், அவன் ஆண்!! ஆயிரம் வேலைகள் அவனுக்கு வெளியில். இதனால், அவளுக்கு வெளியுலகமும் தெரிவதில்லை. தன்னம்பிக்கையும் வருவதில்லை. ஆணும் வெளியில் என்னென்ன வேலைகள் செய்கின்றான் என்ற அறிவுமில்லை.
பெண்ணியம் பற்றி பேசுபவர்கள், இவர்களுக்கு எப்படி புரியவைக்கப் போகிறார்கள்.
தலைகுனிந்து வாழ வேண்டியவள் பெண்; தலை நிமிர்ந்து வாழ வேண்டியவன் ஆண்!!
இதனால், கற்பும், ஒழுக்கமும் ஒருதலையானது என்று ஆண்பிள்ளைகள் சிறுவயதிலேயே முடிவுகட்டிவிடுகின்றனர். பெற்றோர்களும் அந்த நினைப்பில்தானே பிள்ளைகளை வளர்க்கின்றனர். சிரிப்புதான் வருகிறது!
இதற்குப் பெயர்தான் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வது என்பது. இப்படி வளரும் ஆண் பிள்ளைகள் பருவ வயதில் பெண்களை கேலி செய்வதிலும், கிண்டல் செய்வதிலும் ஆச்சரியமில்லையே. அதாவது, தன் பையன் வேறு பெண்ணை கிண்டல் செய்வது போன்று, தன் பெண்ணையும் வேறு சில ஆண்மகன்கள் கிண்டல் செய்யத்தானே செய்வர். எனவே கேலிக்கும் கிண்டலுக்கும் பயந்து பெண்களை வீட்டினுள் பூட்டிவைத்தால் எல்லாம் சரியாகிவிடுமா??
உச்ச கட்டம்:
ஆண்கள், எது நினைத்தாலும் அது அவர்களுக்குக் கிடைத்துவிட வேண்டுமென்று நினைக்கின்றனர். முடியாதபட்சத்தில், அதை அவர்கள் வலுக்கட்டாயமாகப் பெண்களிடமிருந்து பெற நினைக்கின்றனர்.
பெண்கள், தங்கள் உணர்வுகளைக் கூட சுதந்திரமாக வெளியிட முடிவதில்லை, பிறகு கோட்டைக்கே சென்றாலும் என்ன பயன்??
ஒரு பெண், தன் காதலை நிராகரித்தால் என்ன விளைவுகள் நிகழ்கிறது என்று
இந்த சமூகத்தில் திருமணமாகாத பெண்களைவிட, திருமணமாகி கணவனுடன் சேர்ந்து வாழாத பெண்களுக்கும், கணவரையிழந்த பெண்களுக்கும்தான் பாதுகாப்பு மிகவும் குறைவு.
குடும்பம் என்று சொல்லும் போது, ஆண் தலைமையில், அவன் பாதுகாப்பில் நடக்கும் குடும்பம்தான் ஒழுக்கமானது; உயர்வானது. ஆனால் இங்குத்தான் நகைச்சுவையே!! வேலியே பயிரை மேய்கிறது. மற்றவன் தோட்டத்துப் பயிரை.
அதாவது, ஒருத்திக்கு ஒருவன் என்பதும், ஒருவனுக்குப் பலபேர் என்பதும் இயற்கை, சட்டம், தர்மம், நியாயம். ஆனால், ஒருவனுக்கு ஒருத்தி என்பது ஆண்களின் தெய்வத்தன்மை, தூய உள்ளம் என்று கோயில் கட்டி கொண்டாடுவர். அதுவும் சரி உலகத்தில் அரிதானவைகள் எல்லாம் தெய்வத்தன்மையுடையதுதானே.
இங்கு சொல்லவருவது, ஒருத்திக்குப் பலர் என்பது அல்ல. தெளிந்து கொள்க! ஒருவனுக்குப் பல பெண்கள் மனைவிகளாக, வைப்பாட்டிகளாக, வரைவின் மகளிர்களாக இருக்க, அத்தனைப் பேரும், இவனை மட்டும் நினைக்கும் பத்தினிகளாக இருக்கவேண்டும் என்று நினைப்பதைப் போல் அவளும் தன் ஆண்மகன், தன்னை மட்டும் நினைத்திருக்க, தன்னை மட்டும் விரும்பும் (கண் அவர்களாக) கணவர்களாக, தான் அவர்களின் இதயமாக இருக்க வேண்டும் என்று நினைப்பது பாவமா??? கண்ணாய் இருப்பதால் தானே பலரையும் கண்டுகொள்கின்றனர்;
பெண்ணானவள், கணவனே கண் கண்ட தெய்வம்; அடுப்படியே திருப்பதி ன்னு வாழணும்னு நினைக்கிற இந்த சமூகம் ஏன் அவளுக்குக் கல்வியும் பட்டமும் தர வேண்டி விழைகிறது. கூண்டிலடைத்து வைக்கும் கிளிக்கு சிறகுகள் எதற்கு??
பெண்ணைத் தன்னைப் போல் மனிதனாகப் பார்க்காமல், ஆண்களுக்கு சேவகம் செய்பவர்களாக மாற்றியது ஏன்?? அவளின் வீரத்தைக் கண்டு பயமா?
விவேகத்தைக் கண்டு ஆற்றாமையா?
தைரியம் கண்டு நடுக்கமா?
சுறுசுறுப்பைக் கண்டு பொறாமையா?
இன்று பெண்கள் அனைவரும் மெத்தப் படித்துவிட்டனர்; மேதாவிகள் ஆகிவிட்டனர்; மேலைநாடுகள் எல்லாம் தனியாய் பயணிக்கின்றனர் என்பதெல்லாம் அவளின் கண்களைக் கட்டி மலர்க் கண்காட்சி காட்டுவதைப் போன்றுதான். அவளுக்கு அதனால் யாதொரு பயனுமில்லை. அவள் படித்ததன் பயனாய் சிந்தித்தால், சிந்தனைக்குத் தடை; செயல்பட்டால் முன்னேற்றத்துக்கு முட்டுக் கட்டை; ஏதும் செய்யாது வீட்டுக்குள்ளிருந்தால் குலவிளக்கு. வீட்டுக்குள் இருப்பதற்குப் படிப்பு எதற்கு???
“பெண்ணிடமும் மனிதம் இருக்கின்றது! பாலியல் வேறுபாட்டிற்குப் புறம்பாக, ஆண்மைக்கும் பெண்மைக்கும் அப்பாலாக, இந்த மனிதத்தை இனம் கண்டு கௌரவிக்குமாறு, பெண்ணினம் ஆணினத்திடம் அன்புக்கரம் நீட்டுகின்றது. ஆழமான புரிந்துணர்வுடன் ஆணினம் இந்த அன்புக்கரத்தைப் பற்றிக் கொள்ளும்போதுதான் ஆண்-பெண் சமத்துவம் சாத்தியமாகும்.” – மறை திரு. வேலுப்பிள்ளை பிரபாகரன்.
முடிவுதான் என்ன?
பெண்ணியம் என்பது, அனைத்து மக்களாலும், முக்கியமாக, பெண்களாலும் ஏற்றுக் கொள்ள செய்ய இயலாத ஒன்றாகும். எந்த இடத்தில் பெண் இருக்கின்றாள், அவள் இருக்கின்ற சூழல், அவளின் தேவைகள் இவைகளைப் பொருத்து, பெண்களின் எதிர்பார்ப்புகள் வேறுபடுகின்றன.
எடுத்துக்காட்டாக, ஒரு இடத்தில் ஏற்படுகின்ற பெண்ணியத்தின் விளைவு, மற்றொரு இடத்தில் தவறான பாதையாக மாறி விடலாம். இதற்கு காரணம், அந்த இடத்தில் உள்ள பெண்களின் தேவை.
மலைவாழ் பெண்டிருக்கு தேவை என்ன? ஒரு கிராமத்தில் வாழ்கின்ற பெண்டிருக்கான தேவை என்ன? ஒரு நகரத்தில் வாழ்கின்ற பெண்டிருக்கான தேவை என்ன? இப்படி எண்ணற்ற வினாக்கள், விடை தெரியாமலேயே உள்ளன.
அரசாங்கமே பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்று 33% இட ஒதுக்கீடு கொண்டு வந்த போது முதலில் எதிர்த்தவர் ஒரு பெண்.
பெண்ணியம் பேசும் பெண்கள் மற்றும் ஆண்கள் சுயநலத்தை விடுத்து (இன்று 100 க்கு 75 பேர் சுயநலவாதிகள்), பொது நலத்திற்காகப் பாடுபடுவார்கள் என்ற நம்பிக்கை மக்களுக்கு வரும்போது, நானும் ஒரு பெண்ணியவாதி என்று எல்லோரிடமும் கூறிக்கொள்வேன்.
ஆக, பெண்ணியம் என்பது இன்னும் மாயையாகவே உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை!
வணக்கத்துடன்,
தமிழரசன்
